NATIONAL

இழிவுபடுத்தும் வகையிலான படங்களை வெளியிட ஏ.ஐ. பயன்படுத்தும் நபர்களுக்கு எம்.சி.எம்.சி. வலைவீச்சு

புத்ராஜெயா, ஏப் 25 – சமூக ஊடக பயனீட்டாளர்களை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்களை மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்திய நபர்களை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம் சி.) தேடி வருவதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இணையப் பயனீட்டாளர்களின், குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சில  தனிநபர்களை எம்.சி.எம்.சி. தேடி வருகிறது. மேலும், எம்.சி.எம்.சி. அறிந்தவரை  அவர்களில் சிலர் இதற்கு முன்பு விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் அவர்கள் வேறு வடிவத்தில் மற்றும் பிற சேவைகளின் வாயிலாக ஒழுங்கீனச் செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இணைய பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் மிகவும் கவலைப்படுவதற்கும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

இதனால்தான், 13 வயது மற்றும் அதற்குக் குறைவான சிறார்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்  என்று அவர் தனது அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்  கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக,  எடிட் செய்யப்பட்ட இழிவுபடுத்தும் வகையிலான படம்  சமூக ஊடக தளமான எக்ஸ் இணையவாசிகளிடமிருந்து எதிர்மறையான கண்டனங்களை எதிர்கொண்டது.  நாட்டில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை   அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக சமூக ஊடக தள சேவை  வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தகவல் தொடர்பு அமைச்சு சந்திப்பை நடத்தியதாகக் கூறிய ஃபாஹ்மி,  இணைய பயனீட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பான சில நடவடிக்கைகளை அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றார்.


Pengarang :