NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்- பரப்புரை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு 53 பெர்மிட்டுகள் வெளியீடு

கோலாலம்பூர், மே 3- கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த
மாதம் 27ஆம் தேதி தொடங்கி 28 பரப்புரை மற்றும் 25 பிரச்சார
நடவடிக்கைகளுக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் நல்லிணக்கத்துடனும்
முறையாகவும் கட்டுப்பாடாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக
உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது
பைசால் தாஹ்ரிம் கூறினார்.

தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் யாவும்
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதை
உறுதி செய்ய தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் இடங்களில் மாவட்ட
போலீஸ் தலைமையகம் அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கையை
மேற்கொண்டு வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த ஆரோக்கியமான பிரச்சார நடவடிக்கைகள் பிரசாரத்தின் இறுதி நாள்
வரை நீடிப்பதை உறுதி செய்யும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை காவல்
துறை கேட்டுக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

வேட்பு மனுத்தாக்கல் தினமான ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி மே 10ஆம்
தேதி இரவு 10.59 மணி வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம்
வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தின் 4(ஏ) மற்றும் 1998ஆம் ஆண்டு
தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் காவல்
துறை ஒரு குற்றப்பத்திரிகையைத் திறந்துள்ளதோடு தேர்தல் தொடர்பான
மூன்று புகார்களையும் பெற்றுள்ளது என்று அவர் அகமது பைசால்
கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அனைத்து
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அறிவுறுத்திய அவர், பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சினமூட்டும் நடவடிக்கைகயில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :