NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்- மாநில அரசின் 40 உதவித் திட்டங்கள் மீது ஒற்றுமை அரசின் வேட்பாளர் கவனம்

உலு சிலாங்கூர், மே 3- கோல குபு பாரு தொகுதி மக்கள் பயன்
பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர்
பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) முன்னெப்பில் இடம்பெற்றுள்ள உதவித்
திட்டங்கள் மீது ஒற்றுமை அரசின் வேட்பாளர் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் மாநில அரசு
அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு நலத் திட்டங்களில் பங்கேற்பதிலிருந்து
தகுதியுள்ளவர்கள் விடுபடாமலிருப்பதை தாம் உறுதி செய்யவிருப்பதாகப்
பாங் சோக் தாவ் கூறினார்.

பல்வேறு நலத் திட்டங்களை மந்திரி புசார் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போதைக்கு தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தவிருக்கிறேன்.
ஐ.எஸ்.பி. திட்டத்தின் வாயிலாக மக்கள் பயனடைவதை உறுதி செய்யும்
அதேவேளையில் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பாடுபடுவேன்
என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அதிகரிக்க
நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, தேர்தலில் சரியான மற்றும்
முழுமையான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். இந்த பொன்னான
வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்
தெரிவித்தார்.

முன்னதாக அவர் ஜசெக தலைவர் லிம் குவான் எங்குடன் இணைந்து
ராசா, 22 உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுடன்
கலந்துரையாடினார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :