NATIONAL

உலுயாம் பத்து 30 வட்டாரத்தில் வெள்ளத்தைத் தடுக்க வடிகால்கள் சீரமைப்பு

உலு சிலாங்கூர், மே 3- இங்குள்ள உலுயாம்  பத்து 30 பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க சுமார் 200 மீட்டர் நீளமுள்ள வடிகாலை சுத்தம் செய்யும் நடவடிக்கையில்  உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மற்றும் வடிகால், நீர்பாசனத் துறை ஈடுபட்டன.

எனினும் இந்த வடிகால் சீரமைப்பு ஒரு தற்காலிக நடவடிக்கையே எனக் கூறிய உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ராஜசேகரன் ராமையா, நீண்ட கால நடவடிக்கையாக இங்கு வெள்ள நீர் சேகரிப்புக் குளம் அமைக்கப்படும் என்றார்.

முன்பு,  20 முதல் 30 நிமிடங்களுக்கு  கனமழை பெய்தால்கூட  நீர் பெருக்கெடுத்து இங்குள்ள சில குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடும்.

இந்த  விவகாரம் வடிகால் நீர் பாசனத் துறை, மாவட்ட நில அலுவலகம் மற்றும் நகராண்மைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதியில் வெள்ள நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்குவதே எங்களின் நீண்டகாலத் திட்டமாகும் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த திட்டத்தைத் தொடர்வதற்கு முன் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள்  நிறைவேறும் வரை தாங்கள் காத்திருப்பதாக ராஜசேகர் விளக்கினார்.

வட்டார மக்கள், குறிப்பாக பத்து 30 மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பொறுமை காப்பார்கள்  என்று நாங்கள் நம்புகிறோம், இந்த நீர் சேகரிப்பு  குளம் உடனடியாக நிர்மாணிக்கப்படுவதை உறுதிசெய்ய முயற்சிப்போம்  என்று அவர் சொன்னார்.

அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனைக்கு மிக விரைவில்  தீர்வு கண்ட ராஜசேகரனுக்கு  மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு முகநூல் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தாமான் பத்து 30இல் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையை தீர்த்து வைத்த கவுன்சிலர் ராஜசேகரன் ராமையாவுக்கு நன்றி.

இந்தச் பிரச்சனையை விரைவாகத் தீர்த்ததற்காக வடிகால், நீர்பாசனத் துறை மற்றும் நகராண்மைக் கழகத்திற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.


Pengarang :