NATIONAL

போதைப் பொருளை கடத்தியதாக மீனவர், உணவக உதவியாளர் மீது குற்றச்சாட்டு

தைப்பிங், மே 13- இம்மாதத் தொடக்கத்தில் 21,037.10 கிராம் ஹெரோயின்
போதைப் பொருளைக் கடத்தியதாக மீனவர் மற்றும் உணவக உதவியாளர்
ஆகியோருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நுர் அத்திகா சபாரி முன்னிலையில் குற்றச்சாட்டு
வாசிக்கப்பட்ட போது அதனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக
முகமது பவுஸி முகமது மொக்தார் (வயது 42) மற்றும் ஜூல்கர்னாய்
மலிக்கி (வயது 47) ஆகிய இருவரும் தலையை அசைத்தனர். எனினும்
அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மே 3ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் ஜாலான் மேடான்,
சிம்பாங்கில் உள்ள லம் லுங் போட்டோ ஹவுஸ் சென்.பெர்ஹாட்
கட்டிடத்தின் எதிரே உள்ள கார் நிறுத்துமிடத்தில் போதைப் பொருளைக்
கடத்தியதாக அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1952ஆம் ஆண்டு அபாயகர போதை பொருள் சட்டத்தின் 39பி (2) பிரிவின்
கீழ் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின்
39பி(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ்
அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, மரண தண்டனை
விதிக்கப்படாத பட்சத்தில் 30 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் 40
ஆண்டுகளுக்கும் மேற்போகாத ஆயுள் தண்டனை மற்றும் 12க்கும்
குறையாத பிரம்படி வழங்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் எஸ்.நிஷாலினி வழக்கை
நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் சார்பிலும் யாரும்
ஆஜராகவில்லை.

அவ்விருவருக்கும் ஜாமீன் வழக்க மறுத்த நீதிமன்றம் இந்த வழக்கின் மறு
விசாரணையை வரும் ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :