SELANGOR

சாலை விபத்தினால் செம்பனை எண்ணெய் கசிவு- லுவாஸின் துரித நடவடிக்கையால் நீர் மாசுபாடு தவிர்க்கப்பட்டது

ஷா ஆலம், மே 15- காராக் நெடுஞ்சாலையில் நேற்று செம்பனை
எண்ணெய் ஏற்றி வந்த லோரி விபத்துக்குள்ளானதால் நீர் ஆதாரங்களில்
மாசுபாடு ஏற்படும் அபாயம் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர்
மேலாண்மை வாரியத்தின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.

அந்த நெடுஞ்சாலையின் 36.8வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த விபத்து
தொடர்பில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான
அனி பெர்ஹாட்டிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக சுற்றுச் சூழல்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

சுங்கை கோம்பாக் நீர் ஆதாரப் பகுதிக்கு அருகில் இந்த விபத்து
நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து கோம்பாக் நீர் சுத்திகரிப்பு மையம்
8.8 கிலோ மீட்டர் தொலைவிலும் வங்கசா மாஜூ நீர் சுத்திகரிப்பு மையம்
17.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன.

இந்த விபத்தின் காரணமாக அந்த லோரியிலிருந்து கசிந்த எண்ணெய்
நெடுஞ்சாலையோரம் இருந்த வடிகால்களில் வழிந்தோடியது என அவர்
குறிப்பிட்டார்.

அருகிலுள்ள நீர் ஆதாரங்களில் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்க
எண்ணெய் கசிவு ஆற்றில் கலக்காமலிருப்பதை உறுதி செய்வதற்கான
நடவடிக்கைகளை எடுக்கும்படி லுவாஸ் அனி பெர்ஹாட் நிறுவனத்தைக்
கேட்டுக் கொண்டது என அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட அனி
பெர்ஹாட் நிறுவனம் வடிகால்களில் தடுப்புகளை ஏற்படுத்தி எண்ணெய்
ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்தியது என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.


Pengarang :