NATIONAL

சட்டம் 672ஐ ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலம் சிலாங்கூர்

புத்ராஜெயா, மே 16 – நாட்டில் 2007ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைச் சட்டத்தை (சட்டம் 672) ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது  என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலமும்  இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள  கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு 2024 தேசிய நில வடிவமைப்பு தினத்திற்கான முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது சிலாங்கூர் அரசிடமிருந்து இருந்து ஒப்புதல் கடிதம் கிடைத்துள்ளது. இவ்விவகாரத்தில் உரிய கவனம் மற்றும் கூட்டு ஆய்வை மேற்கொள்ளுமாறு தேசிய திடக்கழிவு மேலாண்மைத் துறையின் தலைமை  இயக்குநருக்கு  (முகமது அசார் அப்துல் ஹமிட்) நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

சிலாங்கூரில் பொதுத் தூய்மையின்   தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாகப்   பயன்படுத்தக்கூடிய சொத்துக்களின எண்ணிக்கை மற்றும் கொள்கைகளை  உறுதி செய்வது இதன் நோக்கமாகும்.  எனவே, மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள் என அவர் கூறினார்.

இந்த ஒப்புதலை வழங்கிய மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு  அமைச்சர் ங்கா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சட்டம் 672ஐ ஏற்றுக்கொள்வது தொடர்பான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் முடிவுக்கு தாங்கள் காத்திருப்பதாக ங்கா கடந்த மார்ச்  10ஆம் தேதி கூறியிருந்தார்.

கெடா, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பெர்லிஸ் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் ஆகியவை இதற்கு முன்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டன.


Pengarang :