SELANGOR

மூல நீர் உத்தரவாதத் திட்டம் ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கும்-ஹிஷாம் ஹஷிம் தகவல்

கிள்ளான், மே 28 – சிலாங்கூர் மூல நீர் உத்தரவாதத் திட்டம் (எஸ்.ஜே.ஏ.எம்.)  கால தாமதத்திற்கு பிறகு  இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று அடிப்படை வசதி மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்பு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கத் தவறிய மென்தா சென். பெர்ஹாட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் ஏ பிரிவுப் பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்கை கிள்ளானில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இன்டர்செப்டர் 002 கப்பலின் செயல்பாடுகள் தொடர்பாக  அஃப்பின் குழுமம்  மற்றும் லண்டாசன் லுமாயான் சென். பெர்ஹாட் இடையேயான ஏற்பாட்டு ஆதரவு வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு  கூறினார்.

இத்திட்டம் சிறப்பான முறையில் மேம்பாடு கண்டு வருவதாகக் கூறிய அவர்,  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில் அதன் பணிகள் அமைந்துள்ளது என்றார்.

இருப்பினும், மேலும்  இத்திட்டத்தில் தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை தாம் நிராகரிக்கவில்லை
என்றும்  மேம்பாட்டாளர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்பது அசாதாரணமானது அல்ல என்றும் அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கான  காலக்கெடுவை டிசம்பர் வரை நீட்டிக்க மென்தா சென் பெர்ஹாட் நிறுவனம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

பொது குத்தகைத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நீர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான சிலாங்கூர் சிறப்பு தேர்வுக் குழு (இன்ஃப்ராக்ரோ)   மாநில அரசாங்கத்தை  கடந்த மார்ச் மாதம் வலியுறுத்தியிருந்தது .


Pengarang :