NATIONAL

புக்கிட் புரோகாவில் காணாமல் போன இளைஞர் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், மே 29 – செமினி, புக்கிட் புரோகாவில்  நேற்று முன்தினம்  பொழுதுபோக்கு நடவடிக்கையின் போது காணாமல் போன பதின்ம வயது இளைஞர் நேற்று இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

பதினாறு  வயதான எடி புத்ரா அஃபாண்டி என்ற அந்த இளைஞர்  தனது 40 வயது பராமரிப்பாளர் மற்றும் 13 வயதுடைய இரண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞர் தனது பராமரிப்பாளர் மற்றும் இரு நண்பர்களுடன்  காலை 7.50 மணிக்கு மலையேறும் நடவடிக்கையைத் தொடங்கியதாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைட் ஹாசன் தெரிவித்தார்.

அன்றைய தினம் மதியம் 12.30 மணியளவில் எடி புத்ரா காணாமல் போனதை மற்றவர்கள் உணர்ந்தனர். 19 மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு மலையேறும்  பாதைக்கு அருகிலுள்ள ஒரு பாறைகள் நிறைந்தப் பகுதியில் அவ்விளைஞர் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார்.நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த இளைஞரின் உடல் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாகக் கூறிய அவர், இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்த பட்டுள்ளதாகச் சொன்னார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் முகமட் யூசோப்பை 019-9132784 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் மீட்புப் பணியாளர்கள் அந்த இளைஞரைக் கண்டுபிடித்ததாக சிலாங்கூர்  மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

புக்கிட் புரோகா நுழைவாயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் எடி புத்ரா விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :