ECONOMYSELANGOR

செர்டாங் போலீஸ் நிலையம் மீது மண் ஜாடியை வீசிய நபர்களுக்கு வலைவீச்சு

  கோலாலம்பூர், ஜூன் 3- கவசத் தொப்பியின்றி மோட்டார் சைக்கிளில்
பயணித்ததைக் கண்டித்ததால் சினமடைந்த இரு போதை ஆசாமிகள்
செர்டாங் போலீஸ் நிலையம் மீது மண் ஜாடியை வீசிச் சென்றனர்.

நேற்று அதிகாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காவல்
துறை உறுப்பினர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று செர்டாங்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் போலீஸ் நிலையம் முன்
வண்டியை நிறுத்தியதாகவும் அங்கு காவலில் இருந்து போலீஸ்காரர்
வருகைக்கான நோக்கத்தை கேட்ட போது மோட்டார் சைக்கிளின் பின்
இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் மண் ஜாடியை காவல் நிலையத்தின்
வேலியை நோக்கி வீசிவிட்டு தப்பியதாக அவர் சொன்னார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், அதாவது அதிகாலை 2.30 மணியளவில்
காவல் நிலையத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலுள்ள சாலை
சமிக்ஞை விளக்கில் கவசத் தொப்பியின்றி காணப்பட்ட மோட்டார்
சைக்கிளோட்டிகளை பணியில் இருந்த காவலர்கள் கடிந்து கொண்டதாகக்
கூறிய அன்பழகன், இதனால் சினமடைந்த அந்நபர்கள் இந்த செயலைப்
புரிந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த செயலைப் புரிந்த
ஆடவர்களை தாங்கள் தேடி வருவதாகச் சொன்னார்.


Pengarang :