SELANGOR

சுக்மா போட்டி: சிலாங்கூர் அணி தீவிரப் பயிற்சி- முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற முயற்சி

ஷா ஆலம், ஜூன் 6 – அடுத்த மாதம் சரவாக்கில் நடைபெறவுள்ள 21வது மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) எதிர்கொள்ள சிலாங்கூர் அணி 85 விழுக்காடு  தயாராக உள்ளது.

மாநில அணி பயிற்சிகளையும் முயற்சிகளையும் தீவிரமாக்கியுள்ள அதே வேளையில்   தகுதியான விளையாட்டு வீரர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது என்று  விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி  கூறினார்.

நாங்கள்   தயார் நிலையில்  இருக்கிறோம். இப்போது தயார் நிலை 85 விழுக்காடாக உள்ளது. நாங்கள்  சரவாக் மாநிலத்திற்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நாங்கள் விளையாட்டு வீரர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறும்  இலக்குடன் கூடுதல் பயிற்சிகளுடன் எங்கள் முயற்சிகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம் என்று அவர் சிலாங்கூர்கினியிடம்  கூறினார்.

இன்று இங்குள்ள பண்டார் நுசா ரூவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் நஜ்வான் இதனைச் சொன்னார்.

21வது சுக்மா சாம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17 முதல் 24 வரை சரவாக்கில் நடைபெறவுள்ளது.

சரவாக்கில் நடைபெறும்  சுக்மா போட்டியில் இடம் பெறும்  37 வகையான விளையாட்டுகளில் சிலாங்கூரைச் சேர்ந்த மொத்தம்  1,138 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர் என்று   என்று கடந்த மார்ச் மாதம் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில்   நஜ்வான்  அறிவித்தார்.


Pengarang :