NATIONAL

காஸாவில் போரை நிறுத்தும் அமெரிக்காவின் பரிந்துரைக்கு மலேசியா முழு ஆதரவு

புத்ராஜெயா, ஜூன் 6- முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதன்
மூலம் காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின்
பரிந்துரையை மலேசியா முழுமையாக ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கட்டார் மற்றும் எகிப்துடன் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
முன்வைத்துள்ள பரிந்துரைகள் விரைவான மற்றும் ஆக்ககரமான
அமைதியை அடைவதற்கான சில கோட்பாடுகளை
முன்னிறுத்தியுள்ளதோடு குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு
வரும் தாக்குதலை நிறுத்துவதற்கான சாத்தியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் அமைச்சரவையில் விவாதித்தோடு
அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தின் இந்த அமைதி முயற்சிக்கு முழு
ஆதரவையும் புலப்படுத்தினோம். நான் ஹமாஸ் தலைவர்களுடன்
ஏற்கனவே பேசியதன் அடிப்படையில் பார்க்கையில் இது சாத்தியமான
ஒன்றாகவே தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பரிந்துரை தொடர்பில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குபதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

அமெரிக்காவின் இந்த பரிந்துரை இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாடு
எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,
இந்த பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் முழு மனதாக ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்றார்.

பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துயரத்திற்கு இஸ்ரேலின் ஆணவப்
போக்கும் தன்மூப்பான செயல்களுமே காரணம் என்பதால் அந்நாட்டிற்கு
எதிராக அமெரிக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்று
என அன்வார் தெரிவித்தார்.

காஸாவில் மூன்று கட்ட முழு போர் நிறுத்தப் பரிந்துரையை ஜோ
பைடன் கடந்த மே 31ஆம் தேதி அறிவித்தார். பிணைக்கைதிகளை
விடுவிப்பது, பகைமைப் போக்கை நிரந்தரமாக போக்குவது, காஸாவை
மறுநிர்மாணிப்பு செய்வது ஆகியவை அந்த மூன்று பரிந்துரைகளாகும்.


Pengarang :