NATIONAL

சமூக ஊடகங்களில் ஆடம்பரத்தை காட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் முதலீட்டு மோசடிக் கும்பல்

கோலாலம்பூர், ஜூன் 7- பேஸ்புக் மற்றும் இண்ட்ஸ்டகிராம் போன்ற சமூக
ஊடகங்களில் வெளிவரும் முதலீடு தொடர்பான விளம்பரங்களில்
பெரும்பாலானவை ஏமாற்றும் நோக்கிலும் நம்ப முடியாத வகையிலும்
உள்ளன.

பொது மக்களை முதலீட்டுத் திட்டத்தின்பால் கவர்ந்திழுப்பதற்காக
விளம்பரங்களில் போலியாக அதீத ஆடம்பரத்தைக் காட்டுவது
அக்கும்பலின் பாணியாக உள்ளது என்று புக்கிட் அமான் வர்த்தகக்
குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப்
கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளிவரும் முதலீட்டு விளம்பரங்கள்
உண்மையானவையாக இல்லை. அவர்கள் பயன்படுத்தும் காணொளிகள்
மற்றும் இதர தந்திரங்கள் இறுதியில் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு
வித்திடுகின்றன என்று அவர் சொன்னார்.

பணத்தை சம்பாதிப்பதற்கு எளிதான வழி என்றும் எதுவும் கிடையாது.
அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் மட்டும்
முதலீடு செய்யுங்கள் என்று அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை
கூறினார்.

இன்று இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் 2023/1
தொடருக்கான பயிற்சி சார்ஜன் அடிப்படைப் பயிற்சித் திட்டத்தின்
அணிவகுப்பு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு தேசிய பூப்பந்து விளையாட்டாளர்கள் மோசடிக் கும்பலின் வலையில்
சிக்கி லட்சக்கணக்கான வெள்ளியை பறிகொடுத்த து குறித்து நிருபர்கள்
கேட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய பூப்பந்து குழுவின் கலப்பு இரட்டையர்களில் ஒருவரான லாய் பெய்
ஜிங் முதலீட்டு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி தனது மொத்த
சேமிப்பு பணத்தையும் இழந்து விட்டதாக ஊடகங்கள் கடந்த
திங்கள்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.

தேசிய பூப்பந்து அணியின் முன்னாள் விளையாட்டாரளரான டான் பூன்
ஹியோங், தாமும் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டதாகவும்
இதனால் சுமார் 25 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும்
கூறியிருந்தார்.


Pengarang :