NATIONAL

ஜேபிபிஎம் உறுப்பினர்களின் விரைவான நடவடிக்கையால் தீயிலிருந்து 340 மர வீடுகள் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டன

சண்டாக்கான், ஜூன் 7: நேற்று இரவு கம்போங் செண்டரமாத்தா லிம்புங்கன், ஜாலான் பத்து சாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) உறுப்பினர்களின் விரைவான நடவடிக்கை மற்றும் செயல்திறனால் தீயைக் கட்டுப்படுத்தி அங்குள்ள 340 மர வீடுகளை வெற்றிகரமாகக் காப்பாற்ற முடிந்தது.

இந்த சம்பவத்தில், 13 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் செவெரினுஸ் சைன்கூய் கூறினார்.

“பிபிபி சண்டாக்கான் குழு மாலை 6.05 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான அழைப்பைப் பெற்றவுடன் நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு விரைந்தது. எரிந்த பகுதி ஒரு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்று செயல்பாட்டு குழு தலைவர் தெரிவித்தார்”.

இரவு 7.17 மணிக்குத் தீ வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும், சம்பவத்திற்கான காரணம் மற்றும் இழப்புகள் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 111 பேர் வெளியேற்றப் பட்டதாகச் சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு செயலகம் ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நேற்று இரவு 8.30 மணிக்கு திறக்கப்பட்ட பத்து சாபி மக்கள் வீட்டுத் திட்ட தற்காலிக இடமாற்ற மையத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் 60 பெரியவர்கள் மற்றும் 51 குழந்தைகள் உள்ளனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :