NATIONAL

சுங்கை ஆயர் தாவார்- ஊத்தாங் மெலிந்தாங்கை இணைக்கும் பாலம் 2026 ஜூன் மாதம் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஜூன் 7-  சபாக் பெர்ணம் மாவட்டத்தில்  உள்ள சுங்கை ஆயர் தாவாரையும் பேராக் மாநிலத்தின் ஊத்தாங் மெலிந்தாங்கையும்   இணைக்கும் புதிய பாலம் வரும்  2026 ஜூன் மாதம் பூர்த்தியாகும்.

மொத்தம் 2 கோடியே 19 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும்  2.8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த  பாலம் தற்போது  28 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது என்று கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

சுங்கை ஆயர் தாவாரிலிருந்து  ஊத்தாங் மெலிந்தாங் செல்லும் சாலையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் அத்திட்டத்தை ஆய்வு செய்யவும்  கடந்த ஜூன் 4 ஆம் தேதி எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து  பொதுப்பணித் துறை மற்றும் மேம்பாட்டாளரான மெராந்தி  புடிமான் சென். பெர்ஹாட் நிறுவனப் பிரதிநிதிகள் எனக்கு விளக்கமளித்தனர்.

இன்றைய நிலவரப்படி, திட்டத்தின் கட்டுமானம்  28 சதவீதத்தை தாண்டியுள்ளது என்று அவர்கள்  கூறினார் என்று ரிஸாம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, கட்டுமானக் காலத்தில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளையும் அவர்  எழுப்பியதோடு  உள்ளூர் இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புகளை வழங்குமாறும் மேம்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த  பாலக் கட்டுமானம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்  முடிக்கப்படும் என்றும்  இதன் மூலம்  சுங்கை ஆயர்  தாவார் தொகுதியில் அதிக வசதிகள் மற்றும் சமூக-பொருளாதார நன்மைகளை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.

பெர்ணம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மாநில அரசாங்கம் அறிவித்தது. இது 12வது மலேசியா திட்டத்தின்  கூட்டரசு கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.


Pengarang :