கோலாலம்பூர், ஜூன் 7 – அமெரிக்காவின் டென்னசியில் நடைபெற்ற மியூசிக் சிட்டி டிராக் கார்னிவல் சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய மகளிர் தடகள வீராங்கனை ஷெரீன் சாம்சன் வல்லபோய் 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மர்ஃப்ரீஸ்போரோவில் உள்ள டீன் ஏ. ஹேய்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷெரீன் பந்தயத்தை 51.79 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

பேராக் மாநிலத்தை  சேர்ந்த தடகள வீராங்கனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 63 வது “Mt SAC Relays“ வருடாந்திர தடகள சாம்பியன்ஷிப்பில் தான் ஏற்படுத்திய  51.80 வினாடி  என்ற சாதனையை வெற்றிகரமாக முறியடித்தார்.

ஜமைக்கா வீராங்கனை லியா ஆண்டர்சன் 51.67 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தையும் மற்றும் சொந்த நாட்டு வீராங்கனை நாஷா ரொய்ன்சன் வெண்கலப் பதக்கத்தை (51.82 வினாடிகள்) வென்றார்.


மேலும், 26 வயதான தடகள வீராங்கனை நேற்று தனது சாதனையை முறியடித்த போதிலும், ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அவர் இன்னும் குறைந்தது 50.95 வினாடிகளுக்குள் பந்தைய தூரத்தைக் கடக்க வேண்டும்.