நிரந்தர வைப்புத் தொகை திட்ட மோசடியில் சிக்கி முதியவர் வெ.12 லட்சம் இழந்தார்

ஜோகூர் பாரு, ஜூன் 8- முதியவர் ஒருவர் ‘ஷேர்பூஸ்டர்‘ எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை மோசடியில் சிக்கி தனது சேமிப்புத் தொகையான  12 லட்சம் வெள்ளியை இழந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் இயக்குநரான அந்த 62 வயது முதியவர் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம்.குமார்  கூறினார்.

உள்நாட்டு வங்கி ஒன்றில் பணி புரியும் நண்பர் ஒருவர், அந்த வங்கியினால் நடத்தப்படும் இந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்கும்படி அந்த முதியவரைத் தூண்டியதாக அவர் சொன்னார்.

இதர வங்கிகள் வழங்குவதை விட அதிக வருமானத்தை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும் என்று அந்த முதியரை அவரின் நண்பர் நம்ப வைத்துள்ளார். நண்பரின் வார்த்தையை நம்பிய அந்த முதியவர் அவரிடம் 18 லட்சம் வெள்ளிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதலீடு செய்த முதலாவது மாதத்தில் அந்த முதலீட்டுத் தொகைக்கான வட்டியைப் பெறுவதற்காக அந்த முதியவர் தன் நண்பரை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அந்த நண்பர் வட்டிப் பணத்தை தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக்கழித்துள்ளார் என்று குமார் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

சந்தேகம் அடைந்த அந்த முதியவர் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரித்த போது, தனது பெயரில் 600,000 வெள்ளி மட்டுமே வைப்புத் தொகையில் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட நபரிடம் முதியவர் வழங்கிய தொகையில் 12 லட்சம் வெள்ளி வைப்புத் தொகையில் வைக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அந்த தொகை மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்தது என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த 5ஆம் தேதி சம்பந்தப்பட்ட முதியவர் போலீசில் புகார் செய்ததாகவும் இந்த புகார் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குமார் கூறினார்.


Pengarang :