ஷா ஆலம், ஜூன் 10: கடந்த சனிக்கிழமை சுங்கை கோம்பாக்கில் மதியம் 1 மணியளவில் நீரில் நுரை கண்டறியப்பட்டது, அதற்கான காரணத்தை கண்டறிய சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) விசாரணை நடத்தியது.

பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் உடன் இணைந்து செயல்பட்ட லுவாஸ், நேற்று அதிகாலை 4 மணி வரை நடத்திய விசாரணையில் எந்த முடிவும் இல்லை என்று தெரிவித்தது.

“இருண்ட சூழ்நிலைகள் மற்றும் அடர்ந்த வனப் பகுதிகளால் ஏற்பட்ட அணுகல் தடைகள் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

“நீரில் நுரை உள்ளதற்கான் காரணத்தை அடையாளம் காணவும் மற்றும் மறுபடியும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைக் கண்டறியவும் விசாரணை மீண்டும் தொடங்கும்” என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

சுங்கை கோம்பாக்கில் நீரில் நுரை உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் டீசலின் வாடை நீரோட்டத்தில் உள்ள வளர்ச்சித் திட்ட தளத்தின் ஓர் இடத்தில் கண்டறியப்பட்டது.

மேல் ஆய்வுக்காக அங்கு எடுக்கப்பட்ட மாதிரிகளை மலேசிய இரசாயனத் துறைக்கு லுவாஸ் அனுப்பியது.

“தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கோம்பாக் நதி மற்றும் தொடர்புடைய துணை நதிகளில் நுரை ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய ஆயர் சிலாங்கூர் உடன் இணைந்து லுவாஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.