NATIONAL

தென்கிழக்காசியாவில் சிறப்பாகச் செயல்படும் 12 மலேசிய நிறுவனப் பங்குகள்

நிபோங் திபால், ஜூன் 10 – இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில்
தென்கிழக்காசியாவில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த 15
நிறுவனப் பங்குகளில் 12 மலேசியாவைச் சேர்ந்தவையாகும் என்று
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.

தென்கிழக்காசியாவில் அதிக லாபத்தை பதிவு செய்த 15 நிறுவனப்
பங்குகளை பொருளதாரக் கண்காணிப்பு குழு பட்டியலிட்டுள்ளதாகவும்
அவற்றில் மலேசிய நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை 12 ஆகும்
என்றும் அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நாடு மீண்டும் சரியான தடத்தில்
பயணிக்கத் தொடங்கியுள்ளதை இது பிரதிபலிக்கிறது என்று அவர்
குறிப்பிட்டார்.

நாட்டில் அரசியல் நிலைத்தன்மை உள்ளது. மலேசிய நாணயத்தின்
மதிப்பும் இவ்வாண்டு சிறப்பானதாக இருக்கிறது. இந்த வலுவான நிலை
மற்றும் கணிப்பின் வாயிலாக தென்கிழக்காசியாவில் வாய்ப்புகள் மிகுந்த
நாடாக மலேசியா தொடர்ந்து விளங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது
என அவர் சொன்னார்.

பொருளாதாரம் மேம்பாடு காண்பதற்கான அறிகுறிகளை நாம் காணத்
தொடங்கியுள்ளோம். இந்நிலை நீடித்தால் 2027 மற்றும் 2028 கணிப்பின் படி
புதிய வளர்ந்த நாடாக மலேசியா அறிவிக்கப்படுவதற்கும்
அங்கீகரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான
ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் டீசலுக்கான உதவித் தொகை சீரமைப்பு குறித்து
கருத்துரைத்த அமைச்சர், முன்பு டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு வெ.1.90ஆக இருந்த போது நாட்டின் மொத்த பட்ஜெட்டான 20,000 கோடி வெள்ளியில் உதவித் தொகையின் மதிப்பு 300 கோடி வெள்ளியாக இருந்தது என்றார்.

ஆனால், தற்போது டீசலுக்கான உதவித் தொகை 6,000 கோடி
வெள்ளியாகவும் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராகவும்
உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் அரசாங்கம்
உதவித் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக
உதவித் தொகையை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :