NATIONAL

அரசாங்கத்தின் வெ.200 உதவித் தொகை இலக்கிடப்பட்ட தரப்பினரின் சுமையை குறைக்க உதவும்

கோலாலம்பூர், ஜூன் 11- தகுதியுள்ள டீசல் பயனீட்டாளர்கள் குறிப்பாக
டீசல் வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்கள், விவசாயிகள் மற்றும்
சிறு தோட்டக்காரர்களுக்கு இன்று தொடங்கி ‘பூடி மடாணி‘ உதவித்
திட்டத்தின் கீழ் 200 வெள்ளி வழங்கும் நடவடிக்கை அந்த எரிபொருளைப்
பயன்படுத்துவோரின் செலவுகளை மிச்சப்படுத்த உதவும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலையை அரசாங்கம் லிட்டர் ஒன்றுக்கு வெ.3.35ஆக
நிர்ணயித்துள்ள போதிலும் எஸ்.கே.டி.எஸ். எனப்படும் உதவித் தொகை
டீசல் கட்டுப்பாட்டு முறையின் கீழ் வழங்கப்படும் ஃப்ளீட் கார்டைப்
பயன்படுத்துவதன் மூலம் பொது போக்குவரத்து மற்றும் சரக்கு
வாகனங்களை உள்ளடக்கிய 33 வகையான வாகனங்கள் உதவித் தொகை
சலுகையை அனுபவிக்க முடியும்.

உதவித் தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினரை சென்றடைவதை
உறுதி செய்வதற்கும் டீசல் வீணே விரயமாவதை தடுப்பதற்கும் ஏதுவாக
அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் சரியானதாகக்
கருதப்படுகிறது என்று நடப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளர் நோர்
முகமது ஷாக்கில் ஹமீட் கூறினார்.

இந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மக்கள் விரிவான
கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்த இலக்கிடப்பட்ட மானியத்தை
விவேகத்துடன் பயன்படுத்துவதன் மூலமாகவும் தினசரி வாழ்க்கைச்
செலவினத்தை திறனுடன் கையாள்வதன் வாயிலாகவும் ரொக்க
கையிருப்பின் மதிப்பை உயர்த்த முடியும் என்று அவர் பெர்னாமாவுக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை டீசல் விரயமாகும்
பிரச்சனையைக் களைவதிலும் பெரிதும் துணை புரியும் என்பதோடு
நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும்
ஆதரிக்க வேண்டும் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் துணைப்
பதிவதிகாரியுமான நோர் முகமது தெரிவித்தார்.


Pengarang :