NATIONAL

13 வாகனங்கள் சம்பந்தப்பட்ட  விபத்தில் நால்வர் காயம்- பி.கே.இ. நெடுஞ்சாலையில் சம்பவம்

அலோர் ஸ்டார், ஜூன் 11-  இங்குள்ள பி.கே.இ. நெடுஞ்சாலையின் 21வது கிலோ  மீட்டரில் கூலிம் அருகே  இன்று காலை நிகழ்ந்த 13 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட  நால்வர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் இன்று காலை 7.37 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கூலிம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  உதவி ஆணையர்  அமிஸூல்  அஸ்வான் ஹம்டான் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது ஒரு டிரெய்லர் உள்பட 13 வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதைக் மீட்புக் குழுவினர் கண்டனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வாகனங்களில் சிக்கியிருந்த ஒரு பெண் உள்பட நால்வரை பொது மக்கள் மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அமிஸூல் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பில் காவல் துறை இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.


Pengarang :