NATIONAL

ஷா ஆலமில் உலகத் தரத்திலான கண்காட்சி மையத்தை அமைக்க பி.கே.என்.எஸ். திட்டம்

ஷா ஆலம், ஜூன் 12- இங்கு மேற்கொள்ளப்படவுள்ள எஸ்.ஏ. சென்ட்ரல் நகர புத்துயிரூட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் மிகப் பெரிய கண்காட்சி மையத்தை அமைக்க சிலாங்கூர் மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

அதிகமான வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தும் சிலாங்கூர் அரசின் தேவையை ஈடு செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் இந்த கண்காட்சி மையம், உலகத் தரத்தை கொண்டதாக இருக்கும் என்று பி.கே.என்.எஸ். தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட் அப்பாஸ் கூறினார்.

இந்தப் பகுதியை நாங்கள் வர்த்தக மையமாக மேம்படுத்தவிருக்கிறோம். அலுவலகங்கள் மற்றும் இதர வசதிகளோடு கண்காட்சி மையமும் இங்கு அமைக்கப்படுவது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

எனினும், இந்த மையம் வெறும் வர்த்தக கண்காட்சிகளுக்கான இடமாக மட்டும் இருக்காது. மாறாக, சிலாங்கூரின் வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய ஒருங்கிணைந்த அரச காட்சிக் கூடமாகவும் விளங்கும் என்று அவர் விளக்கினார்.

நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக சைக்கிளோட்டப் பந்தய (எஸ்.ஐ.ஆர்.) முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உத்தேச எஸ்.ஏ. சென்ட்ரல் திட்டம் சிலாங்கூர் மாநிலத் தலைநகரான ஷா ஆலமை தங்க முக்கோணப் பகுதியாக மாற்றும் என்பதோடு உள்ளுர் வர்த்தகர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார அனுகூலங்களையும் வழங்கும் என்று மாமுட் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்த திட்டம் கலாசார மற்றும் வரலாற்று அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். நீடித்த மேம்பாட்டு இலக்கினை அடைவதற்கு ஏதுவாக பசுமைத் தொழில்நுட்பத்தின் மையமாகவும் இது விளங்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புத்துயிரூட்டும் திட்டம் 200 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார். எஸ்.ஏ.சி.சி மால், பிளாசா பெராங்சாங், பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ், எம்.ஆர்.சி.பி. டவர் ஆகிய கட்டிடங்களை உள்ளடக்கிய இந்த திட்டம் இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :