NATIONAL

நிவாரணப் பொருள்களுடன் ராஃபா எல்லையில் சிக்கிய 2,000 டிரக்குகள்- மக்கள் பட்டினியால் வாடும் அவலம்

இஸ்தான்புல், ஜூன் 12- மனிதாபிமான மற்றும் வர்த்தகப் பொருள்களை
ஏற்றிய இரண்டாயித்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் எகிப்தில் உள்ள ராஃபா
எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்
மனிதாபிமான உதவிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச்
செயலகம் நேற்று கூறியது.

மனிதாபிமான மற்றும் வர்த்தகப் பொருள்களை ஏற்றிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் காஸாவுக்குள் நுழைவதற்காக எகிப்து எல்லையில் காத்திருக்கின்றன என்று அது தெரிவித்தது.

தீவிர இராணுவத் தாக்குதல்கள் காரணமாக ராஃபா எல்லை இன்னும்
மூடப்பட்டிருக்கிறது. நிவாரணப் பொருள்களை ஏற்றி டிரக்குகள் தடையற்ற
மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட
வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது என்று அந்தச்
செயலகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.

கடந்த மே மாதம் 6ஆம் தேதி ராஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை
தொடங்கியது முதல் அந்த எல்லைப் பகுதி போக்குவரத்துக்கு தொடர்ந்து
மூடப்பட்டுள்ளது.

காஸாவின் பெரிய அளவிலான பகுதியைத் தாக்கி நிர்மூலமாக்கி விட்ட
இஸ்ரேல் அந்த பிரதேசம் மீது தடையை விதித்துள்ளது. இதன் காரணமாக
அங்குள்ள சுமார் 20 லட்சம் பேர் பட்டினியால் வாடும் அவலம்
ஏற்பட்டுள்ளது.


Pengarang :