SELANGOR

பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் டிங்கியை ஒழிக்க மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14- தனியார் நிறுவனங்களான காவோ
மலேசியா மற்றும் தக்கேடா மலேசியாவின் புதிய தயாரிப்பு பொருள்களின்
வாயிலாக டிங்கி பரவலைத் தடுப்பதற்காக அவ்விரு நிறுவனங்களுடன்
மாநில அரசு ஒத்துழைப்பை நல்கவிருக்கிறது.

இந்த ஒத்துழைப்பின் மூலம் அவ்விரு நிறுவனங்களும் 917,172 வெள்ளி
மதிப்புள்ள 61,080 பயோர் கார்ட் மோஸ் புளோக் சீரம் என்னும் கொசு
விரட்டி மருந்துகளை வழங்கும் என்று சுகாதார்த் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம் காவோ மலேசியா நிறுவனத்துடன்
இணைந்து டிங்கி தடுப்பு நடவடிக்கைகளையும் கூட்டு துப்புரவு இயக்கம்
போன்ற சமூக விழிப்புணர்வு இயக்கங்களையும் சிலாங்கூர் மாநிலத்தில்
நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

இதுதவிர, நோய்ப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் கொசு விரட்டி
மருந்துகளை விநியோகிக்கவிருக்கிறோம். மேலும் டிங்கி காய்ச்சலின்
அபாயம் தொடர்பான பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு
சிலாங்கூரில் உள்ள பள்ளிகளிலும் இத்தகைய விழிப்புணர்வு
இயக்கங்களை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

காவோ மலேசியா நிறுவனத்தின் இந்த நன்கொடையை மாநில அரசு
பெரிதும் போற்றுகிறது. மாநில மக்களின் சுகாதாரத்திற்கு உத்தரவாதம்
அளிப்பதற்கு ஏதுவாக தனியார் துறையினருடனான இத்தகைய
ஒத்துழைப்புகளை மாநில அரசு வரவேற்கிறது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஓன் வோர்ட்ல் ஹோட்டலில் நடைபெற்ற நியு பயோர்
கார்ட் மோஸ் புளோக் சீரம் கொசு விரட்டி மருந்தின் அறிமுக நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.

கொசுக்கள் மனித சருமத்தை கடிப்பதை தடுக்கக் கூடிய இந்த வகை
மருந்துகள் மருந்தகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளிலும்
இணையம் வாயிலாகவும் வரும் ஜூலை மாதம் முதல் பெறலாம்.


Pengarang :