NATIONAL

அதிக உள்நாட்டு சுற்றுப்பயணிகள் சிலாங்கூர் வருகை – மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக சாதனை 

ஷா ஆலம், ஜூன் 14 – உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் மாநிலமாக சிலாங்கூர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக விளங்கி வருகிறது. கடந்தாண்டில் மட்டும் 2 கோடியே 76 உள்நாட்டினரை அது ஈர்த்தது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.

சிலாங்கூருக்கு அடுத்தபடியாகக் கோலாலம்பூர் 2 கோடியே 22 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ள வேளையில் சரவாக் மாநிலத்திற்கு 1 கோடியே 79 லட்சம் பெர் வருகை புரிந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை புரிந்த உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடி பேராகவும் 2022ஆம் ஆண்டு 2 கோடியே 20 லட்சம் பேராகவும் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நீடித்த வளர்ச்சி சிலாங்கூரின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் அபரிமித உயர்வைப் பதிவு செய்து கடந்தாண்டு 2,571 வெள்ளியாக உயர்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள பத்து சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்பு பிரசார இயக்கங்கள் வெற்றியடைந்துள்ளதை இந்த மகத்தான அடைவு நிலை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

அடுத்தாண்டு அனுசரிக்கப்படவுள்ள சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டுக்கு  இந்த பிரசார இயக்கம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் அடுத்தாண்டு மேலும் 80 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஈர்ப்புக்குரிய சுற்றுலா திட்டங்களை அதிகரிக்கும் அதே வேளையில் சுற்றுப்பயணிகளின் தேர்வுக்குரிய முதன்மை இடமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதையும் உறுதி செய்யவுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :