NATIONAL

சமையல் எரிவாயு கூடுதல் விலையில் விற்பனை- வணிகருக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை

புத்ராஜெயா, ஜூன் 19 – பூச்சோங்கில் கட்டுப்படுத்தப்பட்ட  விலைக்கு மேல் சமையல் எரிவாயுவை விற்ற வர்த்தகர் மீது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமையல் எரிவாயு கலங்களின் விற்பனை விலை மற்றும் செலவினம் குறித்த எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிப்பதற்காக 2011 ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாப எதிர்ப்புச் சட்டத்தின்  21வது பிரிவின் கீழ் அந்த வணிகருக்கு ஐந்து நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை  இயக்குநர்  டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.

அரசாங்கம்  சமீபத்தில் டீசல் மானியத்தை ஒருமுகப்படுத்தியதை ஒரு காரணமாகப் பயன்படுத்தி அந்த வணிகர்  விலையை உயர்த்தியுள்ளார். அவரின் இச்செயல் பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அந்த காணொளியின் அடிப்படையிலான முதல் கட்ட விசாரணையில் அந்த  வர்த்தக வளாகம் மற்றும் லோரி விநியோகம் செய்யும் இடம்  சிலாங்கூர் மாநிலத்தின்  பண்டார் புக்கிட் பூச்சோங் என்பதை  அமைச்சு அடையாளம் காண முடிந்தது.

புத்ராஜெயாவைச் சேர்ந்த அமைச்சின் அமலாக்கக் குழு விற்பனை விலையை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மாலை 4.00 மணிக்கு விசாரணையை நடத்தியது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையான  26.60 வெள்ளியுடன் ஒப்பிடும்போது 14 கிலோ  சமையல் எரிவாயு 34.00 வெள்ளிக்கு விற்கப்பட்டது சோதனையில் தெரிய வந்ததாக அஸ்மான் மேலும் கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைக் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்றதற்காக  2011ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாய தடைச் சட்டத்தின்  கீழ் அமலாக்கக் குழு சமையல் எரிவாயு கலங்கள் மற்றும் வணிக ஆவணங்களை பறிமுதல் செய்தது என்றார் அவர்.


Pengarang :