SELANGOR

சிலாங்கூர் சட்டமன்றம் ஜூலை 4இல்  கூடுகிறது- ஆர்எஸ்-1 மத்திய கால ஆய்வு தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம்,  ஜூன் 20-  சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர்  வரும் ஜூலை மாதம்  4 முதல் 18 வரை இரண்டு வாரங்கள் நடைபெறும்.

குறிப்பிட்ட அந்த  தேதியில் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைக்க மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.

கடந்த மே மாதம்  லீ கீ ஹியோங் இறந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற  கோல குபு  பாரு  சட்டமன்ற  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  பாங் சாக் தாவோவின் பதவியேற்பு விழாவுடன் இந்த முறை சட்டமன்றம் தொடங்குகிறது என்று அவர் சொன்னார்.

அதன் பின்னர்,  சபாக் பெர்ணம்  வளர்ச்சி  பகுதி மற்றும் தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பிராந்தியத் திட்டத்தை உள்ளடக்கிய முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) மத்திய  கால மதிப்பாய்வை மந்திரி புசார் டத்தோ’ஸ்ரீ அமிருடின் ஷாரி   முன்வைப்பார்.

மேலும், இளம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்வு ஏற்பாடு மற்றும் வெளிநாட்டு அங்காடி  வியாபாரிகள் தொடர்பான விஷயங்களில்  சட்டமன்றம் கவனம் இம்முறை  செலுத்தும்  என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த சட்டமன்றக் கூட்ட நிகழ்வுகளை மக்கள் நேரடியாகக் காண்பதற்கு ஏதுவாக selangortv.my அகப்பக்கம்  அல்லது யுடியூப்  வழி  சிலாங்கூர் டிவி  நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.

சட்டமன்ற விவாதங்களை   முகநூல், மீடியா சிலாங்கூர் ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் பதிப்புகள் உள்பட சிலாங்கூர்கினி அகப்பக்கம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :