NATIONAL

கணவரால் மனைவி தாக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை

போர்ட்டிக்சன், ஜூன் 20- இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கணவர்
மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார்
விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தாங்கள் புகாரைப்
பெற்றுள்ளதாகவும் 1994ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்
323/18ஏ பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம்
முகமது கூறினார்.

ஹோட்டல் ஒன்றில் ஆடவர் ஒருவர் பெண்மணியைத் தாக்கும் 31
விநாடி காணொளி பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு வருவதாகவும் இதில்
சம்பந்தப்பட்ட இருவரும் கணவன்-மனைவி என்றும் அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

முப்பத்தேழு வயது மனைவி மற்றும் 38 வயது கணவர் சம்பந்தப்பட்ட
இந்த கைகலப்பு கடந்த மே மாத 24ஆம் தேதி நிகழ்ந்தது விசாரணையில்
தெரியவந்தது. கணவரின் நம்பிகைத் துரோகம் இந்த பிரச்சனைக்குக்
காரணம் என நம்பப்படுகிறது என்றார் அவர்.

இந்த சண்டையின் காரணமாக அப்பெண்ணின் கன்னத்தில் காயமும்
உடலில் வலியும் ஏற்பட்டதாகக் கூறிய அவர், விசாரணைக்கு இடையூறு
ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட அந்த காணொளியைப் பகிர வேண்டாம்
என பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :