NATIONAL

வீடு புகுந்து கொள்ளையிடும் அந்நிய நாட்டு கும்பல் முறியடிப்பு- வெ.40 லட்சம் பொருட்கள் மீட்பு

கோலாலம்பூர், ஜூன் 27- லத்தின் அமெரிக்க நாட்டினர் உள்பட எண்மரைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தலை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தாய்லாந்தின் பேங்காக்கிலும் நடத்திய சோதனைகளில் 20 முதல் 40 வயது வரையிலான ஆறு அந்நிய ஆடவர்கள் மற்றும் இரு உள்நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா கூறினார்.

கடந்த மே 31ஆம் தேதி புக்கிட் டாமன்சாராவில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையிடப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து அக்கும்பலுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

சம்பவ தினத்தன்று இரவு 11.34 மணியளவில் வீடு திரும்பிய அந்த தொழிலதிபர் வீட்டிலுள்ள பொருள்கள் கலைந்து கிடப்பதையும் 30 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் 20,000 வெள்ளி ரொக்கம் காணாமல் போனதையும் கண்டதாக அவர் தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக கடந்த ஜூன் 6ஆம் தேதி 20 மற்றும் 22 வயதுடைய இரு அந்நிய நாடு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று இன்று இங்குள்ள பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி மூன்று அந்நிய நாட்டினரும் 11ஆம் தேதி உள்நாட்டுப் பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் ஒரு வெளிநாட்டு ஆடவர் பேங்காக்கில் கடந்த 14ஆம் தேதி பிடிபட்டார் என அவர் குறிப்பிட்டார்.

அக்கும்பலிடமிருந்து 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 25 லட்சம்  வெள்ளி மதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் 4,550 வெள்ளி ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.

கொள்ளைகளை நிகழ்த்துவதற்கு வாடகைக் கார்களைப் பயன்படுத்திய இக்கும்பல் கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாட்டை முடக்கக் கூடிய உபகரணங்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :