NATIONAL

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் பொது போக்குவரத்துப் பயன்பாடு குறைவாக உள்ளது

ஷா ஆலம், ஜூன் 28- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வாகன நெரிசல்
கடுமையாக இருந்த போதிலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளதாக பெட்டாலிங் ஜெயா
நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியேன் சுங் கூறினார்.

வசதி மற்றும் சௌகரியத்திற்காக சொந்த வாகனங்களைச் சார்ந்திருப்பது
மற்றும் பொது போக்குவரத்து துறையில் குறிப்பாக, முதல்-கடைசி
இணைப்பில் காணப்படும் பிரச்சினைகள் இதற்கு காரணமாக உள்ளதாக
அவர் சொன்னார்.

நாம் இப்போது 15 முதல் 20 விழுக்காடாக (பொது போக்குவரத்தை ஏற்றுக்
கொள்ளும் அளவில்) உள்ளோம். இன்னும் வளர்ச்சி காண்பதற்கான
வாய்ப்புகள் உள்ளன என்பது இதன் பொருளாகும். பொது போக்குவரத்தை
நாம் அரக்கத்தனமாக காட்டக்கூடாது என நினைக்கிறேன். அது
பயன்படுத்துவதற்கு வசதியானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க
வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தை பயன்படுத்த முயற்சித்தால் நீங்கள் நிச்சயம் அதை
விரும்புவீர்கள். காரணம், எந்நேரமும் ஸ்டியரிங்கைப் பிடித்துக்
கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிகம் நடப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும்
என்பதோடு வாசிப்பதற்கும் படங்களைப் பார்ப்பதற்கும் நேரம் கிடைக்கும்
என்றார் அவர்.

உத்தேச பெட்ரோல் இலக்கு மானியத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ள
நிலையில் பொது மக்களுக்கான மாற்று போக்குவரத்து சாதனமாக பொது
போக்குவரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்று
சிலாங்கூர் ஜெர்னலுக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

வாகனத்தைப் பயன்படுத்தாத பட்சத்தில் வேலையிடத்திற்கும் வேறு
இடங்களுக்கும் செல்வதற்கு மக்களுக்கு மாற்று போக்குவரத்து வசதி
இருக்க வேண்டும். அது மிக முக்கியமானதாகும் என அவர் சொன்னார்.

செலவினங்களைக் கட்டுப்படுத்தவது மற்றும் உதவித் தொகைத்
திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது போன்ற அரசாங்கத்தின்
நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் பணம் பொது போக்குவரத்து மற்றும்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :