NATIONAL

விமானப் பதிவை உட்படுத்தும் வகையில் சி.ஏ.ஏ.எம். பணியை விரிவுபடுத்துவீர்- அமிருடின் கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 28- வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏதுவாக
விமானங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு
மலேசிய வான் போக்குவரத்து ஆணையத்தின் (சி.ஏ.ஏ.எம்.)
பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோம்பாக் நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அந்த நுட்ப ஒழுங்கு முறை அமைப்பின் அதிகாரம் வான்
போக்குவரத்து சேவைகள் தொடர்பான உரிமங்களை வழங்கும் அளவுக்கு
மட்டுமே உள்ளதோடு குறிப்பாக மலேசியாவில் பொருத்தப்படும்
இயந்திரங்கள் அவற்றில் உள்ளடங்கவில்லை என்று சிலாங்கூர் மந்திரி
புசாருமான அவர் சொன்னார்.

அந்த அமைப்பின் பணிகளை விரிவாக்குவதன் மூலம் மேலும்
லட்சக்கணக்கான வெள்ளியை வருமானமாக ஈட்ட முடியும் என்று அவர்
குறிப்பிட்டார்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்முறை
மேலாண்மையைப் பொறுத்தவரை விமானப் பதிவுக்கான மையமாகச்
செயல்படுவதில் நாம் கண்டுள்ள தோல்வியை மறுஆய்வு செய்ய
வேண்டும் என்பது எனது கருத்தாகும். கவனிக்கப்படாமல் போன இந்த
விஷயம் லட்சக்கணக்கான வெள்ளி மதிப்பிலானது என்று மக்களவையில்
அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தாக்கல் செய்த 2024ஆம்
ஆண்டிற்கான மலேசியா சிவில் வான் போக்குவரத்து ஆணைய (திருத்த)
மசோதா மீதான விவாதத்தை முடித்து வைக்கும் அமர்வில் கலந்து
கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

2007ஆம் ஆண்டு சி.ஏ.ஏ.எம். சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்கிலான
இந்த மசோதா மாவ்கோம் எனப்படும் மலேசியா வான் போக்குவரத்து ஆணையத்தின் பணிகளை சி.ஏ.ஏ.எம். வசம் மாற்றுவதையும் பின்னர் அந்த ஆணையத்தைக் கலைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மசோதா இன்று மக்களவையில் அறுதிப் பெருமான்மையில்
நிறைவேற்றப்பட்டது.


Pengarang :