ANTARABANGSAMEDIA STATEMENT

காஸாவில்  போர் தொடங்கியது முதல்  625,000 சிறார்கள் பள்ளி செல்லவில்லை

காஸா, ஜூன் 30-  காஸாவில் எட்டு மாதங்களுக்கு மேலாக நிகழ்ந்து வரும்  சண்டை காரணமாக 6,25,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனம் (யு.என்.ஆர்.டபள்யூ.ஏ.) கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அவர்களில் 300,000 பேர் யு.என்.ஆர்.டபள்யூ.ஏ. மாணவர்கள் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.

யு.என்.ஆர்.டபள்யூ.ஏ அமைப்பினால் வழங்கப்படும் விளையாட்டு மற்றும் கற்றல் நடவடிக்கைகள் சிறுவர்கள் பள்ளிக்கு திரும்புவதற்கும் கல்விக்கான அவர்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கும் முக்கியமாகும் என்று அந்நிறுவனம் தனது  எக்ஸ் சமூக ஊடக தளத்தில் தெரிவித்தது.

ராஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இட்ட உத்தரவை  மீறி காஸா தீபகற்பத்தின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 37,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 86,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும், குறைந்தது 10,000 பேரைக் காணவில்லை.


Pengarang :