NATIONAL

பொருளாதார வளர்ச்சிக்கு மீண்டும் புத்துயிரளிப்பதில் அரசாங்கம் முன்னுரிமை- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 2- நாட்டின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் அளவை விரிவாக்கும் அதே வேளையில் அதனை சரியான தடத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆசியாவின் பொருளாதார முன்னோடியாக ஆகும் மடாணி பொருளாதார நோக்கத்திற்கேற்ப உயர் வருமானம் கொண்ட நாடாக மலேசியாவை மாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்த பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு 5.0 முதல் 6.00 விழுக்காடாக இருந்தால் மட்டுமே இது சாத்தியாகும் என அவர் சொன்னார். மக்களவையில் நேற்று வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மடாணி பொருளாதார கோட்பாட்டில் அடங்கியுள்ள ஏழு அம்சங்களில் ஒன்றாக விளங்கும் உலகின் 30 முன்னணி பொருளாதார நாடுகளில் பட்டியலில் மலேசியாவை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டம் மீதான விரிவான விளக்கம் குறித்து பாச்சோக் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் முகமது ஷியாஹிர் சே சுலைமான் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்ட மத்திய கால ஆய்வறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முன்னெடுப்புகள், தேசிய எரிசக்தி மாற்ற எதிர்கால இலக்கு, 2030 புதிய தொழில்துறை பெருந்திட்டம் மற்றும் 2024 வரவு செலவுத் திட்டம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.

தரமான மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக க் கொண்ட முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :