ANTARABANGSA

யாலா குண்டு வெடிப்புத் தொடர்பில் சந்தேகநபர் கைது

யாலா, ஜூலை 2- தென் தாய்லாந்தின் யாலா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தேழு வயதுடைய அந்நபர் பன்னான் சாத்தா போலீஸ் குடியிருப்புப் பகுதிக்கு அருகே நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டதாக பன்னான் சாத்தா போலீஸ் தலைவர் ரானோன் சுராவிட் கூறினார்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஆடவர் ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர் தான் தோ நகராட்சி மன்றத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றுகிறார் என்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக அந்த சந்தேக நபர் வாங் ப்ராயா ராமான் ரேஞ்சர் முகாமுக்கு கொண்டுச் செல்லப் பட்டதாக அவர் சொன்னார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவரும் பன்னாங் சாத்தா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாக்குதலில்  தொடர்புடையவர்களை தேடும் பணியை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதான பாலர் பள்ளி ஆசிரியை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 10.10 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 45 பேர் காயமடைந்ததோடு போலீஸ் குடியிருப்புக் கட்டிடம், வீடுகள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.


Pengarang :