NATIONAL

பல்லாண்டுகளாக நீடித்து வரும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே டீசல் இலக்கு மானியம் அமல்- பிரதமர்

புத்ராஜெயா, ஜூலை 2- டீசல் இலக்கு  மானியம், ஊழலை  ஒழிப்பதில் உறுதியான நிலைப்பாடு உள்ளிட்ட  பிரபலம் இல்லாத நடவடிக்கைகளால் மக்களின்  விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றை அமல்படுத்துவதிலிருந்து மடாணி அரசு ஒருபோதும்  பின்வாங்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று  திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டின் வளங்கள் கபளீகரம் செய்யப்படுவதையும் இலக்கிடப்படாத தரப்பினருக்கு  மானியங்கள் விநியோகிக்கப்படாமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வலுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது  முக்கியமானது என்று அவர் சொன்னார்.

எரிபொருள் கடத்தல் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவது மற்றும் அரசின் மானியங்கள் மற்ற நாடுகளின் பயன்பாட்டிற்குச் செல்வதை   கருத்தில் கொண்டு  டீசல் இலக்கு மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

நாங்கள்  மக்களின் கவலைகளை புறக்கணிக்க முடியாது. எனவே மக்கள் மூலம் பெறப்பட்ட வளங்கள் அவர்களிடமே  திரும்ப வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அதனால்தான் சில நேரங்களில் நாம் சிறிது சிரமத்தை எதிர்கொண்டாலும் விளக்கங்களை வழங்குவதில்  விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் இன்று நிதியமைச்சின் ஊழியர்களுடனான மாதாந்திர  சந்திப்பில் கூறினார்.

நாட்டை விற்று விட்டதாகவும் இஸ்ரேலின்  மற்றும் யூதர்களின் ஏஜண்டுகள் என்றும்  பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக அன்வார் கூறினார்.

நான் அடிக்கடி  கொஞ்சமாக பதில் அளிக்கிறேன். ஆனால், நமக்கு பணிகள் உள்ளன என்று நினைப்பதால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை.  வெறுப்பு அரசியல் மிகவும் அடர்த்தியானது என்பதால் இந்த நாட்டில் இது எளிதானதல்ல என்று அவர் சொன்னார்.

முன்வைக்கப்படும் விமர்சனங்களில் உண்மைகள் முற்றாக புறக்கணிக்கப்படுவது குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்தார்.

சம்பளம் வாங்கவில்லை என்றாலும் ஏளனப்படுத்தப்படுகிறேன். ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருந்தாலும் ஏளனப்படுத்தப்படுகிறேன். ஹமாஸுடன்  நட்புறவாக இருந்தாலும் ஏளனப்படுத்தப்படுகிறேன்.  பிளாக்ராக்கின், யூத ஏஜெண்ட் என்றும் முத்திரைக் குத்தப்படுகிறேன். உண்மைகள் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை என்றார் அவர்.


Pengarang :