SELANGOR

சிறுவர்கள், பதின்ம வயதினர் மத்தியில் மனநல பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 2- சிறுவர்கள் மற்றும் பதின்ம மத்தியில் மனநலப் பாதிப்பு 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்து கடந்தாண்டு 922,318 சம்பவங்களாகப் பதிவானதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

 ஐந்து முதல் பதினைந்து வயதுக்குட்டவர்கள் இந்த பாதிப்பை எதிநோக்கியவர்களாக உள்ளதை தேசிய நோய் பாதிப்பு மருத்துவ ஆய்வு காட்டுவதாக அவர் சொன்னார்.

மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப, சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் காணப்படும் மனநலப் பிரச்சனைக்குத் தீர்வு பொறுப்பை அரசு துறைகளையும் தாண்டி அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மக்களையில் இன்று தஞ்சோங் காராங் உறுப்பினர் டத்தோ டாக்டர் ஜூல்கிப்ளி ஹனாபி எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சிறார் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் காணப்படும் மனநலப் பிரச்சனை தொடர்பான தரவுகள் மற்றும் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான அமைச்சின் நடவடிக்கை குறித்து டாக்டர் ஜூல்கிப்ளி கேள்வியெழுப்பியிருந்தார்.

இத்தகைய மனநலப் பிரச்சனைகளைக் கையாள்வதற்காக சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 2,456 இடைநிலைப்பள்ளிகள் மற்றும் 7,776 ஆரம்பப் பள்ளிகளில் ‘மிண்டா சேஹாட் செக்கோலா‘ எனும்  திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

இது தவிர, நாட்டிலுள்ள 1,088 சுகாதார கிளினிக்குகள், 63 மருத்துவமனைகள் மற்றும் 37 சமூக மனநல மையங்களில் மனநலம் தொடர்பான சேவைகளை சுகாதார அமைச்சு வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் 18 சிறார் மனநல மருத்துவ நிபுணர்கள் உள்ளதாகக் கூறிய அவர், வரும் 2027ஆம் ஆண்டுவாக்கில் அந்த எண்ணிக்கையை 30 பேராக உயர்த்த அமைச்சு  திட்டமிட்டுள்ளது என்றார்.


Pengarang :