ECONOMYNATIONAL

அந்நிய நாட்டு விபசாரக் கும்பல் முறியடிப்பு- 75 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 6- அந்நிய நாட்டு விபசாரக் கும்பலுக்கு எதிராக  கிள்ளான் பள்ளத்தாக்கின் எட்டு இடங்களில் சிறப்பு அதிரடிச் சோதனையை நடத்திய குடிநுழைவுத் துறையினர் 75 பேரைக் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில் புத்ரா ஜெயா குடிநுழைவுத் துறையின் உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், இச்சோதனையில் 32 இந்தோனேசியர்கள், 11 வங்காளதேசிகள், எட்டு வியட்னாமியர்கள், ஆறு இந்தியர்கள் உள்ளிட்ட 57 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

மேலும்,  ஏழு வங்காளதேசிகள், இரண்டு மியன்மார் பிரஜைகள் மற்றும் ஒரு இந்தோனேசிய ஆடவரும் இந்த சோதனையில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 17 முதல் 46 வயதுக்குட்பட்டவர்களாவர். இந்த சோதனையில் 23 முதல் 65 வயது வரையிலான ஒரு  பெண் உள்ளிட்ட எட்டு உள்நாட்டினரும் பிடிபட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 13  இந்தோனேசிய மற்றும் நான்கு வியட்னாம் பெண்கள் செல்லத்தக்க பயணப் பத்திரங்களைக் கொண்டிருந்தனர். மேலும் இரு இந்தோனேசியப் பெண்களும் ஒரு வியட்னாமியப் பெண்ணும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் காலம் தங்கியுள்ளனர் என்றார் அவர்.

மற்றவர்கள் முறையான பயணப் பத்திரங்களைக் கொண்டிருக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கைபேசி, இருபது கடப்பிதழ்கள், 1,700 வெள்ளி ரொக்கம், ஒரு கணினி, பத்து வாடிக்கையாளர் பதிவு புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :