மலேசியாவின் இறையாண்மையை வலியுறுத்தி ஐ.நா.விடம் அரசதந்திர குறிப்பு- மலேசியா அனுப்பியது

சிரம்பான், ஜூலை 8 – சபா மீதான பிலிப்பைன்ஸ் நாட்டின்  உரிமை கோரலைத் தொடர்ந்து நாட்டின் இறையாண்மையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு (ஐ.நா.) அரச தந்திரக் குறிப்பை மலேசியா அனுப்பியுள்ளதை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது  ஹசான் உறுதிப்படுத்தினார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பட்டுள்ளபடி நாட்டின் இறையாண்மை என்பது  சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது என்று  அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஒரு குறிப்பை அனுப்பியதால்  நாங்களும் ஒரு குறிப்பை அனுப்பினோம். இது இராஜதந்திர உறவுகள். சபா வழியாக செல்லும் கடல் எல்லையை கருத்தில் கொண்டதாக பிலிப்பைன்ஸின் அந்தக்  குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாங்கள்  ஐ.நா.வுக்கும் ஒரு குறிப்பை அனுப்பினோம் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் சபா தங்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள் என்பது இதன் அர்த்தமாகும். எனவே சபா, மற்றும் சரவாக் ஆகியவற்றின் சுதந்திரம் மற்றும் மலேசியாவின் உருவாக்கம் முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பாணியிலும் அனைத்து தலைவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஐ.நா.வினால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே,  ஆட்சேபக்  குறிப்பை  ஐ.நா.வுக்கு அனுப்பினோம் என்றார் அவர்.

நேற்று இங்கு  ரெம்பாவ் அம்னோ தொகுதி பேராளர்  கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அம்னோ தேசிய துணைத் தலைவருமான அவர் செய்தியாளர்களிடம்  இவ்வாறு கூறினார்.

மலாயா, சபா மற்றும் சரவாக் ஆகிய பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட ஒரு இறையாண்மை கொண்ட நாடு மலேசியா. இதன் மூலம்  மலேசியக் கூட்டரசு உருவானது. மேலும் சபா மீதான சர்ச்சை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பாதிக்காது என நம்புகிறோம் அவர் தெரிவித்தார்.

சபா மீதான பிலிப்பைன்ஸின் கோரிக்கையை நிராகரித்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியும் ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் மலேசியா அரசதந்திரக் குறிப்பை வழங்கியதாக  அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பிரச்சினை அனைத்துலக  அளவில் முடிவு செய்யப்படட்டும். இந்த விவகாரம்  சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வழிவகுக்கும். மலேசியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எங்களுடைய ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று யாரும் வெறுமனே கூற முடியாது என்று முகமது சொன்னார்.


Pengarang :