NATIONAL

தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை- பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 9- தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர்கள் அல்லது அரசு துறைகள் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும்  அரசு துறைகள் அரசாங்கம் இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என்பது அமைச்சரவையின் முடிவாகும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

காரணம், ஊழலை ஒழிக்கும் நமது கோட்பாட்டின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. ஊழல் கலாசாரம் தொடரக்கூடாது என நாம் விரும்புகிறோம். இருப்பினும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பத் தேவையில்லை என நான் நினைக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விதிகள் மீறப் பட்டால் அமைச்சரவையின் உத்தரவு மீறப் பட்டதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்கும் என்று மக்களவையில் இன்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் புதிய திட்டங்களை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் கலாசாரத்தை நிறுத்த அரசாங்கம் தயாராக உள்ளதா என்று பெண்டாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 பொதுச் சேவைத் துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஊழலை ஒழிப்பது மற்றும் நிர்வாகம், உயர் நெறியை உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் 2024-2028 தேசிய ஊழல் தடுப்பு வியூகத் திட்டத்திற்கு (என்.ஏ.சி.எஸ்.) ஏற்ப அமைந்துள்ளதாக என்ற மூலக் கேள்வியை அவாங் முன்னதாக எழுப்பியிருந்தார்.

இந்த என்.ஏ.சி.எஸ். நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறிய அன்வார், இந்த வியூகத் திட்டம் முந்தைய முன்னெடுப்பாக இருந்தாலும் அமலாக்கம் தொடர்பான கொள்கை மற்றும் வியூகம்  தொடர்பில் துல்லியமாக வரையறுக்கும் என்று குறிப்பிட்டார்.


Pengarang :