NATIONAL

கனமழையால் நீர்க் கசிவு – கே.எல்.ஐ.ஏ. பயண மையம் தற்காலிகமாக மூடப்பட்டது

கோலாலம்பூர், ஜூலை 10 – இன்று காலை பெய்த அடைமழை காரணமாகக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முதலாவது முனையத்தில்  உள்ள பயண மையத்தின் 6 வது வாசல் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசர பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயண மையம்  இன்று மதியம் 12 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டும் என்று அது தெரிவித்தது.

இதனால், விமானப் பயணங்கள்  பாதிக்கப்படவில்லை என்றும், இந்த மையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட  விமானங்கள் மாற்று வாயில்களுக்கு மாற்றப்பட்டன என்றும் அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த மாற்றங்கள் குறித்து உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதை உறுதிசெய்வதற்காக எங்கள் விமானப் பங்காளிகளுடன்  அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம் என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

காலை 8.11 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்த பராமரிப்பு குழுவினரால் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது.

நீர்க்  கசிவை சரிசெய்ய  பராமரிப்புக் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருவதோடு இச்சம்பவம்  மீண்டும் ஏற்படாமல் இருக்க முழுமையான ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது.


Pengarang :