SELANGOR

அடுத்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% பங்களிப்பை வழங்க சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஜூலை 12- அடுத்தாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 27 விழுக்காட்டுப் பங்களிப்பை வழங்க  சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது .

முதலாவது  சிலாங்கூர் திட்டத்தில் (ஆர்.எஸ்.1) நிர்ணயிக்கப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்கான இலக்கைத் தாண்டி கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் எட்டப்பட்ட 7.43 விழுக்காட்டு சராசரி ஜி.டி.பி. வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது  என்று  மந்திரி புசார் கூறினார் .

சிலாங்கூர் மாநிலம் கடந்த  2023ஆம் ஆண்டில் 40,000 கோடி வெள்ளிக்கும்  அதிகமான வர்த்தக மதிப்பை பதிவு செய்ததோடு 5.4 விழுக்காடு  என்ற விகிதத்தில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியையும்  பதிவு செய்தது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார் .

27 விழுக்காட்டு  வளர்ச்சி இலக்கை அடைவதற்கு நாங்கள் மிக அருகில் உள்ளோம் என்பதை இந்த சராசரி எண்ணிக்கை காட்டுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பதிவான வழக்கத்திற்கு மாறான 11 விழுக்காட்டிற்கும் அதிகமான சராசரி வளர்ச்சி இந்த அடைவு நிலைக்குப் பங்களித்தது என்றார் அவர்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் தவணைக் காலம் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும்போது  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 27 விழுக்காட்டை எட்ட முடியும் என்று மாநில அரசு நம்புகிறது என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில்  நேற்று கூறினார்.

இதற்கிடையில், பொருளாதார அடைவுநிலை  மற்றும் தற்போதைய புவி-அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, முன்னர் நிர்ணயிக்கப்பட்ட நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  மாநிலத்தின்  பங்களிப்பு இலக்கை 30  விழுக்காட்டிலிருந்து  27 விழுக்காடாகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டதாக அமிருடின் விளக்கினார்.


Pengarang :