திண்பண்டத்தில் எலி மருந்து- விஷத்தின் பயன்பாடு, விற்பனையை  கடுமையாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

கோல பெர்லிஸ், ஜூலை 14- கெடா மாநிலத்தின் கூலிமில் எலி மருந்து கலக்கப்பட்ட கெரோப்போக் திண்பண்டத்தை உட்கொண்டதால் இரு சிறார்கள் உயிரிழந்த விவகாரம் அத்தகைய விஷப் பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மீதான சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அத்தகைய விஷப் பொருள்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சுக்கு குறிப்பாக அமலாக்கத் தரப்பினருக்கு இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

அத்தகைய விஷப் பொருள்களின் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான எஸ்.ஓ.பி. நடைமுறைகளை அல்லது விதிமுறைகளை நாம் எவ்வாறு கடுமையாக்கப் போகிறோம் என்பதை சுகாதார அமைச்சின் அமலாக்கத் துறையினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக இந்த சம்பவம் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள கடல் உணவு விற்பனை வளாகத்தில் சுத்தமான மற்றும் புகையில்லா வளாகங்களைப் பார்வையிடும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

விஷப் பொருள்கள் தொடர்பான எஸ்.ஓ.பி. நடைமுறையை கடுமையாக்கும் பணியில் இதர துறைகளின் ஒத்துழைப்பையும் அமைச்சு நாடும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் புதன் கிழமை வேளாண் தோட்டம் ஒன்றின் வேலியில் வைக்கப்பட்டிருந்த விஷம் கலக்கப்பட்ட கெரோப்போக் திண்பண்டத்தை உட்கொண்டதாக நம்பப்படும் முகமது அக்கில் ஷியாக்கி சுஃபியான் (வயது 3) மற்றும் அவரின் தம்பியான முகமது லுத் ஷியாக்கி (வயது 2) ஆகிய இருவரும் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Pengarang :