NATIONAL

சுங்கை துவாவில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோம்பாக், ஜூலை 14- இங்குள்ள கம்போங் மிலாயு வீரா டாமாய், சமூக
மண்டபத்தில் நடைபெற்ற சுங்கை துவா தொகுதி நிலையிலான சிலாங்கூர்
சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் 200க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 9.00 மணி தொடங்கி மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த
மருத்துவ இயக்கத்திற்கு பொது மக்கள் வழங்கிய ஆதரவு ஊக்கமூட்டும்
வகையில் இருந்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் நோர்ஹயாத்தி ஹசான்
கூறினார்.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதற்கு பொது மக்கள் மத்தியில்
ஆமோக ஆதரவு கிடைத்து வருகிறது. பொது மக்கள் தங்கள்
உடலாரோக்கியம் மீது அக்கறை காட்டத் தொடங்கியுள்ளதை இது
காட்டுகிறது. இந்த பரிசோதனை இலவசமாக நடத்தப்படுவது கூடுதல்
அனுகூலமாக உள்ளது என்றார் அவர்.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் சீனர்கள் அதிகமாக
கலந்து கொண்டனர். அதற்கு அடுத்த நிலையில் மலாய்க்காரர்களும்
இந்தியர்களும் உள்ளனர். நோய்களைத் தொடக்கத்திலேயே கண்டறிவது
மிக முக்கியம் என்பதால் இது போன்ற மருத்துவப் பரிசோதனைகளில்
பொது மக்கள் பங்கேற்பதை நாங்கள் ஊ.க்குவிக்கிறோம் என அவர்
தெரிவித்தார்.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் இருதயம், சிறுநீரகம்,
நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய், கண், காது மற்றும் பல்
தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர்
சொன்னார்.
இங்கு மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டவர்களுக்கு அதன்
தொடர்பான முடிவுகள் செலங்கா செயலி வாயிலாக அறிவிக்கப்படும்.
நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள செல்கேர்
கிளினிக்குகளில் அவர்கள் தொடர் பரிசோதனையை மேற்கொள்ளலாம்
என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மந்திரி  புசாரும் சுங்கை துவா
சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அங்கு சுமார்
ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு பொது மக்களுடன் அளவளாவினார்.
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடினும் உடனிருந்தார்.

Pengarang :