கோம்பாக், ஜூலை 15 – மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) மற்றும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டம் (இன்சான்) ஆகியவற்றின் ஆக்கத்தன்மையை அதிகரிப்பதற்காக அவ்விரு திட்டங்களின் அமலாக்கத்தை மாநில அரசு அடுத்தாண்டு ஆய்வு செய்யவுள்ளது.

மாநிலத்தின் அனைத்து நிலையிலான மக்களும் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக இல்திஸாம் சிலாங்கூர்  பென்யாயாங் முன்னெடுப்பின் கீழுள்ள இந்த திட்டங்களை மறுஆய்வு செய்வது அவசியமாகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாம் இன்சான் மற்றும் எஸ்.எம்.யு.இ. திட்டங்களை அமல் படுத்தியிருக்கிறோம். எனினும், அவற்றின் அமலாக்கம் குறைவாக உள்ளதை நாம் காண்கிறோம். உதாரணத்திற்கு எஸ்.எம்.யு.இ. திட்டத்தைக் கூறலாம். ஷாம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் ஆண்டு தோறும் கிடைப்பது குறித்து மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

பற்றுச்சீட்டுகளுக்கான தொகையை 50 வெள்ளி அதிகரித்த போது அதிகமானோர் அதில் பதிவு செய்தனர். ஆனால், மரண சகாய நிதிக்கான பதிவு குறைந்து விட்டது. ஆகவே, மரண சகாய நிதியை அதிகரிப்பதற்கான தருணம் வந்து விட்டது என்றார் அவர்.

எஸ்.எம்.யு.இ. மற்றும் இன்சான் திட்டங்களை எவ்வாறு தரம் உயர்த்த நாம் முயன்று வருகிறோம் என்பதற்கான உதாரணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள கம்போங் மிலாயு வீரா டாமாய் சமூக மண்டபத்தில் நடைபெற்ற  சுங்கை துவா தொகுதி நிலையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் எளிதாகப் பதிவு செய்வதற்கு ஏதுவாக நாம் பதிவு செயல்முறையை எளிதாக்க வேண்டும். குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பும் உதவியும் கிட்டுவதை உறுதி செய்ய இறப்புக்குப் பின்னரும் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனறார் அவர்.

கடந்தாண்டு, எஸ்.எம்.யு.இ. திட்டத்தின் மூலம் 263,141 பேர் பயன் பெற்ற வேளையில் 6,331 பேருக்கு மரண சகாய நிதி வழங்கப்பட்டது.