NATIONAL

மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க வெ.600,000 மானியம்- மந்திரி புசார் தகவல்

கோம்பாக், ஜூலை 15 – இம்மாவட்டத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி
குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவதற்காக 600,000
வெள்ளியை வழங்கப்பட்டது.

குடியிருப்பாளர்களுக்கு வசதியான சூழலை ஏற்படுத்துவதன் மூலம்
அவர்கள் நல்லிணத்துடனும் சுபிட்சத்துடனும் வசிப்பதற்குரிய வாய்ப்பினை
ஏற்படுத்தும் நோக்கிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசும் மாநில அரசும்
நிதி வழங்கியதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இங்குள்ள செம்பாக்கா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகளை
சீரமைப்பதற்கு செரியா எனப்படும் மாநில சமூகநல புனரமைப்புத்
திட்டத்தின் மூலம் 500,000 வெள்ளி வழங்கப்பட்டது.

மேலும், வர்ணம் பூசம் பணிகளுக்காக செம்பாக்கா அடுக்குமாடி
குடியிருப்புக்கு 50,000 வெள்ளியும் சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு
கேமராக்களைப் பொருத்துவதற்கு பங்சாபுரி பெர்மாய் அடுக்குமாடி
குடியிருப்புக்கு 50,000 வெள்ளியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

செலாயாங் நகராண்மைக் கழக அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று
நடைபெற்ற ரேவாங் எனப்படும் கூட்டு சமையல் திட்ட நிகழ்வில் கலந்து
கொண்டு உரையாற்றிய போது கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான
அவர் இவ்வாறு சொன்னார்.

மாநிலம் முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைப்பதற்கு
ஒரு கோடி வெள்ளி மானியத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாகவும்
அமிருடின் குறிப்பிட்டார்.

இதற்கான விண்ணப்பத்தை கடந்தாண்டு நான் சமர்ப்பித்தேன்.
ஏறக்குறையை 1 கோடி வெள்ளி அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அந்த
நிதியில் ஒரு பகுதி இன்றைய நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று
அவர் கூறினார்.

கடந்த 2011 முதல் 2022 ஜூன் மாதம் வரை மாநிலத்திலுள்ள 357 மலிவு
விலை அடுக்குமாடி குடியிருப்புகளை புனரமைப்பதற்கு மாநில அரசு 12
கோடியே 37 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :