NATIONAL

மரம் விழும் சம்பங்களால் பாதிக்கப்படுவோர் இழப்பீடு கோரலாம்- ஷா ஆலம் டத்தோ பண்டார் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூலை 15- மரம் விழும் சம்பங்களால் பாதிக்கப்படுவோர்
ஊராட்சி மன்றங்கள் வாயிலாக இழப்பிடு கோர முடியும்.

இழப்பீட்டைப் பெறுவதற்கு ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள
புகைப்பட ஆதாரங்கள் மற்றும் போலீஸ் புகார் போன்ற நடைமுறைகளை
பூர்த்தி செய்ய வேண்டும் என்று டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி
முகமது யாத்திம் கூறினார்.

இருப்பினும், மரம் விழுந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
வழங்குவது காப்புறுதி நிறுவனங்கள் நடத்தும் விசாரணையின் முடிவைப்
பொறுத்தே அமையும் என்று அவர் விளக்கினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தைப் பொறுத்த வரை சில நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடம் தொடர்பான புகைப்படம், போலீஸ்
புகார் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஆகியவையும் அதில்
அடங்கும் என்று அவர் சொன்னார்.

இத்தகைய இழப்பீட்டு கோரிக்கைகளை ஊராட்சி மன்றங்கள் வாயிலாக
முன்வைக்க முடியும். அந்த கோரிக்கைகளை காப்புறுதி நிறுவனங்கள்
பரிசீலிக்கும் என்று நேற்று இங்கு நடைபெற்ற வாகனமில்லா தின
நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
குறிப்பிட்டார்.

இதனிடையே, இம்மாவட்டத்தில் ஆபத்து மிகுந்த 1,000 மரங்களை ஷா
ஆலம் மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளதாக முகமது பவுஸி
கூறினார்.

மரம் விழும் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய
கடந்தாடு 34 லட்சம் வெள்ளியையும் இவ்வாண்டு 10 லட்சம்
வெள்ளியையும் மாநகர் மன்றம் செலவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள மரங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதை
உறுதி செய்வதற்கு ஏதுவாக கண்காணிப்பை மேற்கொள்ள சிறப்புக் குழு
ஒன்றை ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைத்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :