NATIONAL

மலேசியாவுக்கு ஆமைகளைக் கடத்த முயன்ற நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

புதுடில்லி, ஜூலை 16-  இந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 160 ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த முயன்ற நபர் சென்னை அனைத்துலக  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட  பயணியையும் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த  ஆமைகளையும்  பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத் துறையிடம் ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குச் செல்லவிருந்த அந்த நபர், தென்னிந்திய  மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு பண்ணை உரிமையாளரிடமிருந்து தலா 100 ரூபாய் என்ற விலையில்  (சுமார் 5.50 வெள்ளி) அந்த ஆமைகளை வாங்கி மலேசியாவில் விற்பதன் மூலம் 50 மடங்குக்கு மேல் லாபம் ஈட்ட திட்டமிட்டிருந்தார்.

தென்னிந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் இந்திய நட்சத்திர ஆமை இனம் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

சில தென்கிழக்காசிய நாடுகளில் அந்த நட்சத்திர ஆமைகள்  வளர்ப்பு பிராணிகளாக விற்கப்படுகின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டில்,  இதே இனத்தைச் சேர்ந்த 1,364 ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை சென்னை அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் முறியடித்தனர்.


Pengarang :