NATIONAL

கருத்து பதிவிடலைத் தடுக்கும்படி ஊடகங்களுக்கு உத்தரவா? அமைச்சர் ஃபாஹ்மி மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 18 – சமூக ஊடக கணக்குகளில் பொது மக்கள்
வெளியிடும் கருத்துகளை முடக்கும்படி ஊடகத் துறையினருக்கு தாம்
உத்தரவிடவில்லை என்ற தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்
கூறினார்.

கருத்துகளைத் தடுப்பது உள்பட தங்கள் தளங்களில் கட்டுப்பாடுகளை
விதிக்கும் உரிமை ஊடக நிறுவனங்களுக்கு உள்ளதாக அவர் சொன்னார்.

இணைய ஊடகம் ஒன்றின் வாசகர் கருத்து தொடர்பில் கடந்த 2021ஆம்
ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிப்புமிகு
உறுப்பினர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

வாசகர்கள் வெளியிடும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட ஊடகத் தளங்களே
பொறுப்பு என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆகவே, கருத்துப்
பதிவிடல் தொடர்பில் நாம் எச்சரிக்கைப் போக்கை கடைபிடிக்க வேண்டும்
என்று அவர் சொன்னார்.

மக்களவையில் இன்று சில ஊடகங்களின் இணைய ஊடக கணக்குகளில்
கருத்துப் பகுதி முடக்கம் செய்யப்பட்டது மற்றும் பேச்சு சுதந்திரத்தையும்
இணைய பகடிவதையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கையையும்
சமநிலைப்படுத்துவதற்கான தேவை குறித்து பாசீர் மாஸ் தொகுதி
பெரிக்கத்தான் உறுப்பினர் அகமது ஃபாட்லி ஷாரி எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, சமூக ஊடகங்களின் பல்வேறு மொழிகளில் பயனுள்ள
உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்வதற்கான அமைச்சின் நடவடிக்கை
குறித்து சிகாமாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர்
ஆர்.யுனேஸ்வரன் எழுப்பியக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதன்
தொடர்பில் டிக்டாக் தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகச்
சொன்னார்.

ஒவ்வொரு ஊடகத் தளமும் சொந்த மதிப்பீட்டு குழுவைக் கொண்டுள்ளது.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின் மதிப்பீட்டைப்
பொறுத்த வரை பொது மக்கள் மற்றும் இதர தரப்பிரின் புகாரை
அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.

நடப்பு நிலவரப்படி பெரும்பாலான டிக்டாக் நேரலைகள் பின்னிரவு
வேளையில்தான் நடைபெறுகின்றன. மறைந்த ராஜேஸ்வரியின்
டிக்டாக் நேரலைகூட விடியற்காலை 3.00 அல்லது 4.00 மணிக்குதான் இட
பெற்றுள்ளது. ஆகவே கண்காணிப்பில் மாற்றங்கள் செய்வது
அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :