SELANGOR

ஆகாயப் படைத்தளத்தில் எரிபொருள் மாயம்- மூன்று போலீஸ்காரர்கள் உள்பட அறுவர் கைது

ஷா ஆலம், ஜூலை 19- அரச மலேசிய போலீஸ் படையின் வான்  நடவடிக்கைப் பிரிவின்  தீபகற்ப ஆகாயப்படைத் தளத்தில் கெரோஸின் ஜெட்-ஏ1 எனும் வகையைச் சேர்ந்த எரிபொருள் காணாமல் போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று போலீஸ்காரர்கள் உள்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த எரிபொருள் காணாமல் போனது தொடர்பில் தாங்கள் கடந்த ஜூலை 15ஆம் தேதி புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

இந்த புகாரைத் தொடர்ந்து நம்பிக்கை மோசடிக்  குற்றம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கையை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக் குற்றப்புலனாய்வுத் துறை திறந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக புகார் கிடைத்த மறுநாள் 31 முதல் 55 வயது வரையிலான ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் தீபகற்ப வான் படைத் தளத்தில் பணியாற்றும் இளநிலை போலீஸ் அதிகாரிகள் என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கைதான அனைவரும் பிடிபட்ட தினத்திலிருந்து இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :