ANTARABANGSAMEDIA STATEMENT

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் 29 மலேசிய விளையாட்டாளர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், ஜூலை 20-  வரும் ஆகஸ்டு மாதம்  29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ள 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில்  மிக அதிகமாக அதாவது 28 விளையாட்டாளர்கள்  மலேசியாவைப் பிரதிநிதிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பாராலிம்பிக் மன்றத்தின் (எம்.பி.எம்.) தலைவர் டத்தோஸ்ரீ மெகாட் டி ஷஹ்ரிமான் ஜஹாருடின் தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அனைத்துலக  விளையாட்டு நிகழ்வில் மற்றொரு தடகள வீரரும் சக்கர நாற்காலி டென்னிஸ் வீரரும் பங்கேற்கக்கூடும் என்று அவர் கூறினார்.

நாட்டைப் பிரதிநிதிக்கும் விளையாட்டு வீரர்களின் இறுதிப் பட்டியலை அங்கீகரிப்பதற்காக  இன்று கூடிய எம்.பி.எம்  தேர்வுக் குழு  இம்முடிவை உறுதிப்படுத்தியதாக  மெகாட் டி ஷஹ்ரிமான் தெரிவித்தார்.

எம்.பி.எம். சட்டவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி  இந்த தேர்வு செயல்முறை ஒரு கட்டாய செயல்முறையாகவும்  பாரீஸ் 2024 போட்டியில்  பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் அனைத்துலக பாராலிம்பிக் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலாகும் விளங்குகிறது.

இந்த தேர்வுக் குழுவிற்கு மெகாட் டி ஷஹ்ரிமான் தலைமை தாங்கினார். மேலும் தேசிய விளையாட்டு மன்றம்,  (எம்.எஸ்.என்.) தேசிய விளையாட்டு கழகம் (ஐ.எஸ்.என்.) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், தொடர்புடைய தேசிய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மலேசிய பாரா ஒலிம்பிக் குழுவை வழிநடத்தும்  டத்தோ சுப்பிரமணியம் நாயர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டு வீரரைப் பற்றி மெகாட் டி ஷஹ்ரிமான் கூறுகையில், அவரது பங்கேற்பு தொடர்பான ஐ.பி.சி.யின் ஒப்புதலுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும்  வரும் ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் முடிவு தெரிந்துவிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சொன்னார்.

கடந்த 2020 தோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 22 மலேசிய விளையாட்டு வீரர்கள் ஒன்பது வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.


Pengarang :